தென்கொரிய விமான விபத்தில் குடும்பத்தினர் 9 பேரும் உயிரிழந்த சோகம்... எஜமானர்களை இழந்து தவித்து வரும் நாய்!
கடந்த வருடத்தின் கடைசியில் துயர சம்பவமாக தென்கொரியாவில் விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரும் அந்த விபத்தில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. குடும்பத்தினர் அனைவருமே விமான விபத்தில் உயிரிழந்த நிலையில், அவர்கள் வளர்ந்து வந்த நாய், தனது எஜமானர்களை இழந்து தனியே தவித்து வந்தது. இந்நிலையில் புடிங் என்ற அவர்களின் வளர்ப்பு நாயை தென் கொரிய விலங்குகள் உரிமைக் குழுவினர் மீட்டு, பராமரித்து வருகின்றனர்.
181 பேருடன் சென்ற ஜெஜு பயணிகள் ஜெட் விமானம் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 179 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விமான விபத்தில் தன் எஜமானர்கள் 9 பேரும் பலியான நிலையில், அவர்களைக் காணாமல் அவர்களது வளர்ப்பு நாய் தவித்து வந்தது.
உள்ளூர் ஊடகங்களில் எஜமானர்களைக் காணாமல் புட்டிங் அலைந்து திரியும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலானது. “புட்டிங் தன் பராமரிப்பாளர் இல்லாமல் கிராமத்தில் சுற்றித் திரிவது பாதுகாப்பற்றது என்று நாங்கள் தீர்மானித்தோம். இறுதிச் சடங்கில் துக்கமடைந்த குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட பிறகு, பொருத்தமான பாதுகாவலர் கிடைக்கும் வரை புட்டிங்கைப் பாதுகாக்க முடிவு செய்தோம்.
விபத்தில் பலியானவர்களில் மூத்தவர் என அடையாளம் காணப்பட்ட 79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் அந்த நாய் வசித்து வந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக அந்த முதியவர், அவரது மனைவி, மகள் மற்றும் ஆறு வயது பேத்தி உட்பட அவரது குடும்பத்தின் 9 உறுப்பினர்களும் தாய்லாந்தின் பாங்காக் பயணத்தின் போது விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்ததிலிருந்து, புட்டிங் வீட்டிற்கும் கிராமத்தின் மையத்திற்கும் இடையே அலைந்து திரிந்து தன் எஜமானர்களைத் தேடி வருவதைக் காண முடிந்தது. காணாமல் போன தனது குடும்பத்தைத் தேடுவது போல நாய் அடிக்கடி வாகனங்களுக்கு அருகில் காத்திருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். அதன் அவல நிலையைக் கண்டு நெகிழ்ந்த உள்ளூர்வாசிகள், அதன் உரிமையாளர்கள் இல்லாத நிலையில் நாய்க்கு உணவு வழங்கினர்.
புட்டிங் கிராம மண்டபத்திற்கு வெளியே அமைதியாக அமர்ந்திருப்பதைக் கண்டோம். நாங்கள் நெருங்கியதும் அது தன் குடும்பத்திற்காக இன்னும் காத்திருப்பது போல் உற்சாகத்துடன் எங்களை நோக்கி ஓடி வந்தது. பின் குடும்பத்தினர் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தது. அதன்பின்னர் புட்டிங்கை மீட்டு சியோலுக்கு கொண்டு சென்ற பின்னர் அது கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது” என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!