மகன் கண்ணெதிரே தாய் துடிதுடித்து பலியான சோகம்... மாடு மிரண்டதால் விபரீதம்!
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், எஸ்.கே.எஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சிங்காரி (52). நேற்று ஆங்கில புத்தாண்டு தினம் என்பதால் சிங்காரி தனது மகன் சிவராமனுடன் மோட்டார் சைக்கிளில் குன்றத்தூர் சென்று, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கியுள்ளார்.
அதன் பின்னர் நேற்று மாலை 5 மணியளவில் நந்தம்பாக்கத்தில் உள்ள தங்களது வீட்டிற்குச் செல்வதற்காக தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் திருபெரும்புதூர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தனர். வண்டி கலெட்டிபேட்டை, அம்பேத்கர் சிலை அருகே சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே வந்த குதிரை வண்டியில் இருந்து வந்த அதிக சத்தம் காரணமாக சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று மிரண்டு தறிகெட்டு ஓடியது.
அவ்வாறு ஓடிய மாடு, சிங்காரி வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தாய், மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்த வேகத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த சிங்காரி, தனது மகன் கண்ணெதிரே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மகன் சிவராமன், தாயின் உடலை கட்டி அணைத்து கதறி அழுதது காண்போரை கண்கலங்கச் செய்வதாக இருந்தது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குரோம்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த சிங்காரி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் வழக்குப் பதிவு செய்து, குதிரை வண்டியை ஓட்டி வந்த சோமங்கலம், காட்ரம்பாக்கம், புதுப்பேடு பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன்(41) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே,விபத்து ஏற்படக் காரணமாக இருந்த மாட்டின் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மகன் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!