பாம்பை கழுத்தில் அணிந்து சுற்றிச்சுற்றி வந்த இளைஞர்!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இளைஞர் ஒருவர், தனது கழுத்தில் சாரைப்பாம்பை போட்டுக்கொண்டு வந்து அங்குமிங்கும் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவரிடம் வனத்துறை நடத்திய விசாரணையில், சாரைப்பாம்புடன் சுற்றித் திரிந்தது, கருப்பூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அரவிந்த்குமார். இவருக்கு வயது 26. விசாரணையில், அரவிந்த்குமார் தனது வீட்டின் அருகே இருந்து இந்த சாரைப்பாம்பை பிடித்துள்ளார்.

அந்த பாம்பை வெளியிடத்தில் கொண்டு சென்று விட திட்டமிட்டு சென்றுள்ளார். அப்போது பிரச்சார கூட்டத்தை பார்த்ததும், அவர்கள் முன் சாகசம் செய்வது போல் பாம்பை கழுத்தில் அணிந்துகொண்டு சுற்றிச் சுற்றி வந்துள்ளார். பிறகு அந்த பாம்பை முட்புதரில் விட்டுவிட்டார் எனத்தெரியவந்தது. இதனையடுத்து அரவிந்த்குமார் பெயரில் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
