நாளை திருப்பரங்குன்றம் மகா கும்பாபிஷேகம்...!

 
திருப்பரங்குன்றம்


முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு 14 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (திங்கட்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி ரூ.2 கோடியே 36 லட்சத்தில் 20 திருப்பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.   அதில் ரூ.90 லட்சத்தில் கோவிலின் கம்பீரமான சுமார் 125 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தில் பஞ்சவர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பிரதானமான கருவறையில் மின் விளக்குகள் பொருத்தல், பக்தர்கள் தரிசன வரிசையில் பித்தளை கம்பி பொருத்தல் உட்பட  சில பணிகள் நடந்துள்ளது.இந்நிலையில் 'கல்கம்' என்ற 55 வகையான மூலிகையை கொண்டு மருந்து சாத்தப்பட்டுள்ளது.  கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சஷ்டி மண்டபம் மற்றும் வள்ளி தேவஸ்தான மண்டபம் வளாகத்தில் 75 குண்டங்கள் அமைத்து ஜூலை 10ம் தேதி யாக சாலை அமைக்கப்பட்டு முதல் கால வேள்விகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஜூலை 11ம் தேதி  காலை மற்றும் மாலையில் 2-ம் கால, 3-ம் கால யாகவேள்விகள் நடந்தது. நேற்று காலையிலும், மாலையிலுமாக 4-ம் கால மற்றும் 5-ம் கால யாகவேள்வி நடந்தது. 

திருப்பரங்குன்றம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 6-ம் கால மற்றும் 7-ம் கால யாக வேள்விகள் நடக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு 8-ம் கால யாக வேள்விகள் நிறைவு பெறுகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் இருந்து வந்துள்ள 150 சிவாச்சாரியர்கள் யாகசாலை பூஜை செய்து வருகின்றனர். 85 ஒதுவார்கள் மூலம் தமிழ் வேத பாராயணம் நடந்து வருகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு   யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ராஜகோபுரத்திற்கு தங்கம், வெள்ளி கடம் புறப்பாடு நடக்கிறது. அங்கு அதிகாலை 5.25 மணிக்கு ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக கும்பாபிஷேகம் நடக்கிறது.

திருப்பரங்குன்றம் முருகன்

இதே போல கோவிலுக்குள் உள்ள கோவர்த்தனாம்பிகையின் விமானம், விநாயகரின் விமானம் மற்றும் பசுபதி ஈசுவரர் விமானத்திற்கு மேள தாளங்கள் முழங்க கடம் புறப்பாடாகி புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் முடிந்ததும் காலை 6.10 மணிக்கு   கோவிலின் கருவறையில் முருகப்பெருமானின் திருக்கரத்தில் மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது. இந்நிகழ்வில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது .

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?