இந்திய பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிப்புக்கு காரணம் இது தான்... ட்ரம்ப் நிர்வாகம் பளிச் பதில்!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் மீது 50% இறக்குமதி விதித்துள்ளார். இந்த வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மத்திய மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகஸ்ட் 30ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வரிகள், 1977ம் ஆண்டு சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி விதிக்கப்பட்டவை.

இந்த சட்டம் ஜனாதிபதிக்கு வரி விதிக்கும் அதிகாரத்தை அளிக்கவில்லை என்று 7-4 என்ற வாக்கு வித்தியாசத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு, ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ட்ரம்ப் நிர்வாகம், இந்தியாவின் மீது 50% வரி விதித்ததற்கு, உக்ரைன் போரால் ஏற்பட்ட தேசிய அவசரநிலையை காரணமாக காட்டியுள்ளது. மேலும் இந்தியா, ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் ரஷ்யாவின் போருக்கு மறைமுக நிதி அளிப்பதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப் இது குறித்து “ரஷ்யாவின் உக்ரைன் மீதான போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், அமெரிக்காவின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த வரிகள் அவசியம்,” என உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இந்த வரிகள், இந்தியாவின் ஜவுளி, நகைகள், மற்றும் கடல் உணவு ஏற்றுமதி துறைகளை மிகக் கடுமையாக பாதித்துள்ளன, மேலும் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.5%-லிருந்து 6%-க்கு கீழே குறையலாம் எனவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு, வரி விதிக்கும் அதிகாரம் காங்கிரசுக்கு மட்டுமே உள்ளது எனத் தெளிவுபடுத்தியது. “IEEPA சட்டத்தில் வரி என்ற வார்த்தையே இல்லை, மேலும் ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவதற்கு காங்கிரஸ் உத்தேசிக்கவில்லை,” என நீதிபதிகள் கூறினர். இந்த தீர்ப்பு, ட்ரம்பின் ஏப்ரல் மற்றும் பிப்ரவரி மாதங்களில் அறிவிக்கப்பட்ட வரிகளுக்கானது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ட்ரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் விரைவான தீர்ப்பை கோரியுள்ளது, இல்லையெனில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “எங்களுக்கு எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை, மேலும் இந்தியாவின் தேசிய நலன்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்,” என திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
