கள்ளக்குறிச்சியில் சோகம்... மலைத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி!
மலைத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தியாகதுருகம் அருகே கூத்தக்குடி சிவன் கோவில் பகுதியில் அரச மரம் உள்ளது. இந்த மரத்தில் தேனீக்கள் கூடு கட்டியிருந்தது. இந்த தேன் கூட்டை நேற்று காலை சிலர் அழித்தனர். அப்போது அங்கிருந்த தேனீக்கள் பறந்து வந்து அப்பகுதியில் இருந்த அதே ஊரை சேர்ந்த கார் டிரைவர் வீராசாமி (45) என்பவர் உள்ளிட்ட 10 பேரை விரட்டி விரட்டி கொட்டியது. இதில் காயமடைந்த 10 பேரும் அதேஊரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்நிலையில் வீட்டில் இருந்த விராசாமிக்கு இரவு திடீரென மயக்கம் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர், அவரை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவருக்கு செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சற்று நேரத்தில் வீராசாமி இறந்து போனார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கிராம மக்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு இரவு நேர டாக்டர் நியமிக்கவேண்டும், தேன் கூட்டை கலைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

இதனை ஏற்ற கிராம மக்கள் மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சற்று பரபரப்பும் நிலவியது. இதனிடையே வீராசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
