விடுமுறை நாளில் சோகம்... 3 பவுன் நகைக்காக பெண், கழுத்தை அறுத்துக் கொலை!
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே 3 பவுன் நகைக்காக மூதாட்டி ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள பெரிய குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சூசை மாணிக்கம். இவரது மனைவி குழந்தை தெரசு (65). இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் திருமணமாகி திருச்சியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதேபோல் மகள் திருமணமாகி முகவனூரில் வசித்து வருகிறார்.

கணவர் சூசைமாணிக்கம் இறந்ததால் குழந்தை தெரசு மட்டும் பெரியகுளத்துபட்டியில் உள்ள ஓட்டு வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவர் 100 நாள் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தார். நேற்று இரவு குழந்தை தெரசு வழக்கம்போல் வீட்டின் முன்பகுதியில் கட்டிலில் படுத்து தூங்கினார்.
இந்நிலையைில் இன்று காலையில் அவர் கட்டிலில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, குழந்தை தெரசு கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, தோடு உள்ளிட்ட 3 பவுன் தங்க நகைகளும் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தை தெரசு தனியாக வசிப்பதை அறிந்து மர்மநபர்கள் அவரை கொன்று நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
