காற்றில் கரைந்த காவியக் குரல்... உமா ரமணன் நினைவலைகள்!
தமிழ் திரையுலகில் கடந்த 35 ஆண்டுகளாக பிண்ணனி பாடகியாக திகழ்பவர் உமா ரமணன். இவர் நேற்று திடீர் உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முறையாக இசை கற்றுக்கொண்டவர் உமா ரமணன். தனது கல்லூரிக் காலங்களில் பாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றவர்.

உமா ரமணன், மேடை நிகழ்ச்சிகளில் பாடி வந்த போது அப்போதைய பிரபலம் ஒருவர் இந்தி படத்தில் இவருக்கு பாடல் பாட வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த சமயத்தில், தனது வருங்கால கணவரான ஏ.வி.ரமணனை சந்தித்தார். அவரும் தான் நடத்திவரும் மேடைக் கச்சேரிகளில் பாடல்களைப் பாடுவதற்கான பெண் குரலைத் தேடிக் கொண்டிருந்தார். உமா ரமணனை குரல் கச்சேரிக்கும், வாழ்க்கைக்கும் ஆதார ஸ்ருதியாக மாற்றிக்கொண்டார். இருவரும் இணைந்து ஆயிரக்கணக்கான மேடைக் கச்சேரிகளில் பாடியுள்ளனர்.
ஏ.வி.ரமணன், உமா ரமணன் இருவரும் இணைந்து 'பிளே பாய்' என்ற இந்தி திரைப்படத்தில் பாடினர். எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் 1977ம் ஆண்டு 'கிருஷ்ணலீலா' படத்தில் ஒரு பாடலை பாடினர். 1980 களில் இளையராஜா 'நிழல்கள்' திரைப்படத்தில் பாடும் வாய்ப்பை கொடுத்தார். தமிழிலிலும் இவருக்கு பாடல்கள் பாட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து பெரும் வரவேற்பை பெற்றார். இளையராஜா அறிமுகத்தில் பல நாட்கள் திரைத்துறையில் இருந்த ஒரு பாடகி உமா ரமணன். இவர் பல சூப்பர் ஹிட் பாடல்களை இளையராஜாவின் இசையில் பாடியவர்.
இளையராஜாவின் இசையில் உருவான நிழல்கள், மூடுபனி, பன்னீர் புஷ்பங்கள் என பல படங்களில் வெற்றிப் பாடல்களை பாடியுள்ளார். பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இடம் பெற்றிருந்த 'ஆனந்த ராகம்' பெரும் வரவேற்பை பெற்றது. 'அமுதே தமிழே' பாடலையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். உமா ரமணின் மொழி உச்சரிப்பு ரசிகர்களை அவரிடையே கொண்டு சேர்த்தது எனலாம்.

உமா ரமணன் - ஜேசுதாஸ் காம்போவில் இணைந்து பாடிய அனைத்துப் பாடல்களுமே ஸ்பாட்டிஃபை ஹிட் தான். 'கஸ்தூரி மானே', 'கண்ணனே நீ வர', 'ஆகாய வெண்ணிலாவே', 'நீ பாதி நான் பாதி' என ஒவ்வொரு பாடலும் எவர்க்ரீன் பாடல்கள். எம்எஸ்வி, சங்கர் - கணேஷ், டி.ராஜேந்தர், தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி, மணி சர்மா, ஸ்ரீகாந்த் தேவா, வித்யாசாகர் என பல இசையமைப்பாளர்களின் இசையில் உமா ரமணன் பல பாடல்களை பாடியுள்ளார்.
சிவகாசி படத்தில் 'இது என்ன இது என்ன புது மயக்கம்' என்ற பாடலும், திருப்பாச்சி படத்தில் வரும் 'கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு' என்ற பாடலும் உமா ரமணன் தான்.
இளையராஜா இசையில் உமா ரமணின் குரலில் வந்த பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கும். 1980ல் தொடங்கிய இவரது இசைப்பயணம், இளையராஜாவில் தொடங்கி இளையராஜாவுடனே முடிந்துள்ளது. 6000த்திற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார். ஏ.வி.ரமணன் - உமா ரமணன் இருவரும் ஒரு நேர்காணலில் பாடல் பாடுவது குறித்து இருவரும் இணைந்து பல்வேறு பாடல்களை பாடியிருந்தாலும் இளையராஜாவின் இசையில் இதுவரை ஒன்றாக பாடியதே இல்லை எனக் கூறினர்.
உமா ரமணன், தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். இவரது மகன், விக்னேஷ் ரமனணும் பாடகர். உமா ரமணன் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக தெரிகிறது. இவர் நேற்று மே 1ம் தேதி இரவு உயிரிழந்துள்ளார்.
ஆனந்த ராகம்-பன்னீர் புஷ்பங்கள்
அமுதே தமிழே-கோவில் புறா
கஸ்தூரி மானே-புதுமை பெண்
நீ பாதி நான் பாதி பெண்ணே-கேளடி கண்மணி
ஆகாய வெண்ணிலாவே-அரங்கேற்ற வேலை
வெள்ளி நிலவே-நந்தவன தேர்
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி - மகாநதி
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் - தூறல் நின்னு போச்சு என இவரது குரலில் எவர்க்ரீன் பாடல்கள் ஏராளம். உமா ரமணனின் மறைவிற்கு தமிழ் திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். உமா ரமணன் மறைந்தாலும் காலமும், காற்றும் உள்ளவரை அவரது குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும். என்னுடைய மனைவியான உமா ரமணன் நேற்று மாலை 7.45 மணியளவில், இறைவனடி சென்றார்கள். அவர் இறப்பார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய மகனும் இதை எதிர்பார்க்கவில்லை.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
