தமிழகம் முழுவதும் கோவில்களில் விஜயதசமி குழந்தைகளுக்கான வித்யாரம்பம் கோலாகல கொண்டாட்டம்!
இன்று தமிழகம் முழுவதும் விஜயதசமி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், புகழ்பெற்ற ஆலயங்களில் குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை கோவிலுக்கு அதிகாலையிலேயே அழைத்து சென்று அரிசியில் அ எழுத வைத்து, பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இன்று விஜயதசமி நாளில் என்ன செய்தாலும் அது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். இதனை கருத்தில் கொண்டு, பிரசித்திப்பெற்ற கோவில்களிலும், வீடுகளிலும் தாம்பாளத்தில் வைக்கப்பட்ட அரிசி மற்றும் நெல்லில் எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுத்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட கோவில்களில் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்து கோவில்களிலும் செய்யப்பட்டு இருந்தன. தங்கள் குழந்தைகளுடன் ஆர்வமாக அதிகாலையிலேயே கோவிலுக்குச் சென்று பெற்றோர்கள் சிறப்பு வழிபாடுகளைச் செய்து குழந்தைகளுக்கு எழுத கற்றுக் கொடுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான பொதுமக்கள் தங்களது குழந்தைகளை அழைத்து வந்திருந்த நிலையில், தாம்பூலத்தில் வைக்கப்பட்டிருந்த அரிசியில் அ, ஆ எழுத வைத்தனர். தங்க ஊசியால் குழந்தைகளின் நாக்கில் அ எழுதப்பட்டது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், ஐயப்பன் கோவில், சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், திருச்சி, மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல கோவில்களிலும் வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. பார்வதிபுரம் வனமாலீஸ்வரர் கோவிலில் உள்ள சரசுவதி சன்னிதானத்தில் தங்க ஊசியாலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துக்களை எழுத செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர்.

வழக்கமாக கேரளாவில் இருந்தும் ஏராளமான பெற்றோர் தங்களது குழந்தைகளை இங்கு அழைத்து வருவார்கள். கேரளாவில் நாளை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறுவதால் கேரளாவை சேர்ந்தவர்கள் வருகை குறைவாக இருந்தது. இது தவிர இன்று பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதிலும் பெற்றோர் ஆர்வம் காட்டினர்.
பத்மநாபபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் கோவிலிலும் இன்று காலை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு பூஜைக்கு பிறகு வித்யாரம்பம் நிகழ்ச்சி தொடங்கியது. குழந்தைகளின் நாவில் தங்க குச்சியாலும், தாம்பாள தட்டில் வைக்கப்பட்டிருந்த தானியத்தில் கைவிரல்களாலும் எழுத்துக்களின் வடிவங்களை எழுதி, எழுத்தறிவை சொல்லி கொடுத்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!
