ஜூலை 30 முதல் 3 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து... சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க!
சென்னை மாநகராட்சியில் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 1 வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனையடுத்து ஜூலை 30 ம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 ம் தேதி இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7, 8, 9, 10, 11, 12, 13 மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச் சாலை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2000 மி.மீ விட்டமுடைய 2வது வரிசை பிரதான குடிநீர் குழாயினை, ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் 2000 மி.மீ குடிநீர் பிரதான குழாயுடன் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜூலை 30 அன்று காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 ம் தேதி இரவு 10.00 மணி வரை மண்டலங்கள் -7 (அம்பத்தூர்), 8 - (அண்ணா நகர்), 9 - (தேனாம்பேட்டை), 10 - (கோடம்பாக்கம்), 11 - (வளசரவாக்கம்), 12 - (ஆலந்தூர்), 13 - (அடையாறு) மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குள்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
