ரூ.28 லட்சத்தை ஆன்லைன் மோசடியில் இழந்த பெண்... வங்கி அதிகாரி கடிதம் எழுதி வங்கி வளாகத்தில் தற்கொலை !
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த அதிகாரி பூமிகா சோரதியா. 25 வயதான பூமிகா வங்கி வளாகத்திலேயே பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை வங்கி ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பூமிகா உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பூமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் தனக்கு ரூ.28 லட்சம் கடன் இருப்பதாக பூமிகா கூறியிருந்தார். அந்த பணத்தை தன்னால் திருப்பி செலுத்த முடியாததால் இந்த முடிவை எடுப்பதாகவும், தனது மரணத்திற்கு பிறகு தன்னுடைய பி.எப். பணத்தை எடுத்து பெற்றோரிடம் வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். தனது உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்படும்போது தனது பெற்றோர் ஒரே ஒரு முறை தன்னை கட்டிப்பிடிக்க வேண்டும் இதுவே தனது கடைசி ஆசை என்றும் பூமிகா அந்த கடிதத்தில் கூறியிருந்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன்படி பூமிகா டெலிகிராம் செயலி மூலம் ஒரு ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழந்துள்ளார் என்பதை கண்டறிந்தனர். பூமிகா டெலிகிராம் செயலியில் ஆன்லைன் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறும் ஒரு குழுவில் இணைந்துள்ளார். அந்த குழுவில் இருந்த நபர்கள் பூமிகாவிடம் ரூ.500 முதலீடு செய்யும்படி கூறி, அவர்கள் கூறும் பணிகளை முடித்த பிறகு ரூ.700 சன்மானம் தருவதாக கூறினர். ஆரம்பத்தில் அந்த குழு மூலம் சிறிய அளவில் பூமிகா லாபம் ஈட்டினார். அதன் பிறகு அதிக தொகையை முதலீடு செய்ய குழு உறுப்பினர்கள் பூமிகாவை வற்புறுத்தினர்.

அதிக லாபம் கிடைக்கும் என நினைத்து பூமிகா கடன் வாங்கி பணத்தை முதலீடு செய்தார். சுமார் ரூ.28 லட்சம் வரை பணம் முதலீடு செய்யப்பட்ட நிலையில், அவர் எதிர்பார்த்தபடி லாபம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான பூமிகா, இறுதியில் தற்கொலை முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது குறித்து பூமிகாவின் பெற்றோர் அளித்திருந்த புகாரில், சம்பந்தப்பட்ட ஆன்லைன் மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகார் மற்றும் பூமிகா எழுதி வைத்துள்ள கடிதம் இவைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட டெலிகிராம் குழு நிர்வாகிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
