டாஸ்மாக் கடை முன் வாலிபர் வெட்டிக்கொலை... உறவினர்கள் போராட்டம்!

வல்லநாடு அருகே டாஸ்மாக் கடை முன் வாலிபரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர் ஈனமுத்து மகன் முருகேஷ் (28). கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவில் வல்லநாட்டை அடுத்த பாறைகாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நடந்து சென்றார். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்மநபர்கள் திடீரென்று முருகேஷை சுற்றி வளைத்து சரிமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தப்பி சென்றது. பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த பயங்கர கொலை சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே முருகேஷின் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் முருகேஷின் உடலை தூக்கிச் சென்று, முறப்பநாடு காவல் நிலையம் முன்பு வைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முருகேஷை கொலை செய்த கொலையாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!