லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை... உயர் நீதிமன்றத்தில் திடீர் வழக்கு!

 
லோகேஷ் கனகராஜ்

கார்த்தி, விஜய், கமல் என ஹிட் இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு போடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'மாநகரம்’ படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்து, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்தார். இவரது படங்கள் தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் பெற்றிருந்தாலும் படங்கள் மீது தொடர்ந்து முன்வைக்கப்பட்டும் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருக்கிறது வன்முறை. குறிப்பாக, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களில் இது அளவுக்கதிகமாக வன்முறை இருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இந்த இரண்டு படங்களுமே வசூலில் ரூ. 500 கோடியைத் தாண்டியது.

லியோ

இந்த நிலையில்தான் லோகேஷ் கனகராஜூக்கு உளவியல் சோதனை நடத்த வேண்டும் எனச் சொல்லி மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ராஜாமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதில், ’விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ’லியோ’ திரைப்படத்தில் கலவரம், சட்டவிரோத செயல்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக இயக்குவது, காவல்துறை உதவியுடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்பன போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

இந்த காட்சிகள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை லோகேஷ் கனகராஜ் காட்டி இருக்கின்றன. இதுபோன்ற திரைப்படங்களை தணிக்கை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யவேண்டும். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு முறையாக உளவியல் பரிசோதனை செய்யவேண்டும். ஏனெனில், வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளை படமாக்கியதற்காக இந்திய தண்டனைச் சட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் இப்படக்குழு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ‘லியோ’ படத்திற்கும் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. இதனால், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். லோகேஷ் கனகராஜ் மீது இப்படியான ஒரு வழக்கு வந்துள்ளது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web