அதிமுக முதல் த.வெ.க. வரை... கே.ஏ. செங்கோட்டையனின் அரை நூற்றாண்டு அரசியல் பயணம்!

 
செங்கோட்டையன்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) மிக மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கே.ஏ. செங்கோட்டையன், கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலான தனது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளார். அ.தி.மு.க.வின் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றிய அவர், இன்று நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அ.தி.மு.க.வில் தீவிரமாக இருந்த செங்கோட்டையன், தனது முதல் சட்டமன்றத் தேர்தலை 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் சந்தித்தார். இதுவரை 10 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ள அவர், 1996 ஆம் ஆண்டைத் தவிர மற்ற ஒன்பது முறையும் வெற்றி பெற்றுள்ளார். இதில், 8 முறை கோபிசெட்டிபாளையம் தொகுதியில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். ஒரே தொகுதியில் இவ்வளவு முறை வெற்றி பெற்ற மூத்த தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

செங்கோட்டையன்

பதவிகள் மற்றும் வீழ்ச்சி:
அதிமுக ஆட்சியில் இவர் வகித்த பதவிகள்: 1991: போக்குவரத்துத் துறை அமைச்சர்.

2011: வேளாண்மைத் துறை அமைச்சர், பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்.

2012ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

2016 ம் ஆண்டு மீண்டும் வெற்றி பெற்றாலும் ஜெயலலிதா அமைச்சர் பதவி வழங்கவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2017ம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு முக்கியப் பொறுப்பான கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

அதிமுகவில் தனி மரியாதை கொண்ட செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே அவரது விலகலுக்குக் காரணமானது.

ஓ. பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைச் செங்கோட்டையன் முழுமையாக ரசிக்கவில்லை. இதுவே பிரச்சினைக்குத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து மோதல், பிளவை அதிகப்படுத்தியது. அத்திக்கடவு-அவினாசி திட்டப் பாராட்டு விழாவில் ஜெயலலிதா படம் வைக்கப்படாததைக் காரணம் காட்டிச் செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தது, உறவில் எரிந்த நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது.

இதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் அவர் புறக்கணித்தார். பிறகு செங்கோட்டையனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் மற்றும் மாநிலப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். இறுதியில், ஓ.பி.எஸ். உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் இணைக்க அவர் குரல் கொடுத்த போது, எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுக்கவே, அவர் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டார்.

விஜய் செங்கோட்டையன்

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்ததால் அவர் பா.ஜ.க.வில் இணைவார் என்று தகவல் பரவியது. ஆனால், தனது எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்த அவர், இன்று நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

செங்கோட்டையனுக்குத் த.வெ.க.வில் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அமைப்புப் பொதுச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பிரசார சுற்றுப்பயணத் திட்டங்களை வகுத்துக் கொடுத்ததில் வல்லவரான செங்கோட்டையன், இப்போது விஜய்யின் பிரசார சுற்றுப்பயணத்தை வகுக்கும் பணியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் தொடங்கி, பா.ஜ.க. வழியாகத் த.வெ.க.வில் முடிந்துள்ள இவரின் அரசியல் பயணம், தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!