பதவி உயர்வு, அதிகார பலம் தரும் மாசி பெளர்ணமி வழிபாடு... இன்று இப்படி பிரார்த்தனை பண்ணுங்க!

இன்று மார்ச் 13ம் தேதி மாசி மாதத்தில் வருகின்ற பெளர்ணமி தினம் அத்தனை விசேஷமானது. பொதுவாகவே மாசி மாதத்தை மகத்துவமான மாதம் என்கிறோம். மாசி மக நீராடல் ஜகத்தை ஆள்கின்ற வல்லமையைத் தருவதைப் போலவே மாசி பெளர்ணமி விரதம் அதிகாரங்களையும், பதவி உயர்வையும் தரும். சகல செல்வாக்கும், உயர் பதவிகளும், தொழிலில் மேன்மையும் அடைய மாசி பெளர்ணமி வழிபாடு மிகுந்த பலன் தரும். பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்த தினத்தில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்திட நினைத்த காரியம் நிறைவேறும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமியிலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய என்னென்ன பலன்கள் கிடைக்கலாம் என்பதை அறிந்து கடைப்பிடித்திட சிறப்பான பலன்களை பெறமுடியும்.
சித்திரை மாத பௌர்ணமியில் சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து வழிபட முக்தி அடையலாம்.
வைகாசி மாத பௌர்ணமியில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபட இன்பமான வாழ்வு அமையும்.
ஆனி மாத பௌர்ணமியில் காரைக்கால் அம்மையாருக்கு விரதம் இருந்து வழிபட இறை தரிசனம் கிட்டும்.
ஆடி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட தீர்க்க சுமங்கலி வாழ்வு பெறலாம்.
ஆவணி மாத பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபட சகோதர ஒற்றுமை மேலோங்கும்.
புரட்டாசி மாத பௌர்ணமியில் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்தால் பித்ருக்களின் பரிபூரண ஆசியைப் பெறலாம்.
ஐப்பசி மாத பௌர்ணமியில் சிவபெருமானுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்திட வறுமை, பசிப்பிணி நீங்கி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
கார்த்திகை மாத பௌர்ணமி கார்த்திகை தீபத் திருநாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் சிறப்பான எதிர்காலம் அமையும்.
மார்கழி மாத பௌர்ணமியில் விரதம் இருந்து நடராஜனின் ஆருத்ரா தரிசனம் பார்த்தால், சிறப்பான எதிர்காலம் அமையும்.
தை மாத பெளர்ணமி தினத்தன்று தான் தைப் பூச விழா கடைப்பிடிக்கப்படுகிறது. தைப்பூசத்தன்று சிவனுக்கும், முருகனுக்கும் விசேஷமான தினம். இந்த நாளில் விரதம் இருந்து கந்தனை வழிப்பட்டால், வாழ்நாள் முழுவதுமே கந்தன் அருள் கிடைக்கும்.
மாசி மாதத்தில் வருகிற பெளர்ணமியன்று தான் மாசி மக திருநாளைக் கொண்டாடுகிறோம். மாசி மகத்தன்று விரதம் இருந்து நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால், இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பும், ஆசீர்வாதமும் கிட்டும்.
பங்குனி மாதத்தில் வருகிற பெளர்ணமியில் தான், பங்குனி உத்திரப் பெருவிழா நடத்தப்படுகிறது. இந்த உத்திர நட்சத்திர நாளில் தான், முருகன் – வள்ளி திருமணம், சிவன் -பார்வதி திருமணம், சீதா- ராமர் திருமணம் என தெய்வத் திருமணங்கள் நடைபெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அத்தனை விசேஷமான நட்சத்திர அமைப்பை உடைய தினம் பங்குனி உத்திரம். அன்றைய தினம் வழிபாடு செய்தால் நல்ல வரன்கள் நம்ம வீட்டு வாசல் தேடி வரும். இந்த நாளில் குலதெய்வ வழிபாடும் சிறப்புக்குரியது. இதனால் குடும்ப ஒற்றுமை பலப்படும். அதனால், உங்கள் இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும் மறக்காமல் இந்த தினத்தன்று வழிபட்டு வாழ்வில் ஏற்றம் காணுங்கள்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!