பெண்களுக்கு 100% முத்திரைத்தாள், பதிவுக்கட்டணம் தள்ளுபடி... 5 ஏக்கர் வரை விவசாய நிலம் வாங்க 50% மானியம்.. தாட்கோ அறிவிப்பு!
விவசாயத் தொழிலைச் சார்ந்துள்ள எளிய குடும்பத்துப் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும் என்பதற்காகத் தாட்கோ (TAHDCO) நிறுவனம் மூலம் இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
ஒரு பயனாளி அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்க இத்திட்டம் வழிவகை செய்கிறது. நிலத்தின் திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது.

நிலம் வாங்கும் போது செலுத்த வேண்டிய 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்தல், மின் மோட்டார் பொருத்துதல் மற்றும் மின் இணைப்பு பெறுவதற்கான வைப்புத் தொகை (ரூ. 75,000) ஆகியவற்றைத் தாட்கோ நிறுவனமே ஏற்கும்.
விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் (SC) அல்லது பழங்குடியின (ST) சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தில் பெண் இல்லை என்றால் மட்டுமே கணவர் அல்லது மகன் விண்ணப்பிக்கலாம். 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் வாங்கப்படும் நிலத்தை அடுத்த 20 ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது.

தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (tahdco.com) வழியாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்குச் செல்லலாம். அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (வட்டாட்சியரிடம் பெறப்பட்டது), நிலமற்றவர் என்பதற்கான சான்று (VAO-விடம் பெறலாம்), வாங்க உத்தேசித்துள்ள நிலத்தின் ஆவணங்கள் (கிரயப் பத்திரம், பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் EC), வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
