மாடு முட்டி ரத்த வெள்ளத்தில் சரிந்த 11 வயது சிறுமி... ஜாம்பஜார் மார்க்கெட்ட்டில் மீண்டும் நேர்ந்த துயரம்!
சென்னை ஜாம்பஜார் மார்க்கெட் பகுதியில் மாடு முட்டியதில் 11 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை அந்தச் சிறுமி தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, சாலையில் நின்று கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென ஆக்ரோஷமடைந்து அவரை முட்டித் தள்ளியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறுமிக்கு உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாட்டை விரட்டிவிட்டு, ரத்த வெள்ளத்தில் இருந்த சிறுமியை மீட்டனர்.

படுகாயமடைந்த அந்தச் சிறுமி உடனடியாகச் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சமீபகாலமாகச் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. அரும்பாக்கம் மற்றும் கொரட்டூர் பகுதிகளில் ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தற்போது ஜாம்பஜாரிலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளது மாநகராட்சி நிர்வாகத்தின் மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டின் உரிமையாளர் யார் என்பதைக் கண்டறிந்து அவர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. "மாடுகளைச் சாலைகளில் திரிய விடுபவர்களுக்கு அபராதம் விதித்தாலும், நிலைமை மாறவில்லை" என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யச் சென்னை மாநகராட்சி இன்னும் கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
