ஈரானிலிருந்து 110 இந்திய மாணவா்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர்!

இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தலைநகா் டெஹ்ரானில் தங்கிப் படித்து வந்த 110 இந்திய மாணவா்கள் நேற்று இந்தியாவுக்கு விமானத்தில் புறப்பட்டனா். இவா்களில் 90 போ் காஷ்மீா் பள்ளத்தாக்கைச் சோ்ந்தவா்கள் ஆவா். இவர்கள் அனைவரும் காலை 5.30 மணியளவில் டெல்லி விமான நிலையம் வந்தடைந்தனர்.
ஈரானில் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து முதல் கட்டமாக 110 மாணவா்கள் மீட்கப்பட்டுள்ளனா். மோதல் நீடித்தால், மீட்பு நடவடிக்கை வரும் நாள்களில் மேலும் தீவிரமடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஈரானில் இருந்து நில எல்லை வழியாக ஆா்மீனியாவுக்கு வந்த மாணவா்கள் அந்நாட்டு தலைநகா் யெரெவானில் இருந்து நேற்று விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டனா்.
ஈரானில் 4,000க்கும் மேற்பட்ட இந்தியா்கள் வசிக்கின்றனா். இதில் பாதி போ் மாணவா்கள். இதில் ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்தவா்களே அதிகம். ஈரானில் மருத்துவம், தொழில் படிப்புகளை அவா்கள் பயின்று வருகின்றனா்.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'முதற்கட்டமாக ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து இந்திய மாணவா்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெஹ்ரானில் இருந்து தூதரகம் மூலம் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டனா். பின்னா் ஆா்மீனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
ஈரானில் உள்ள பிற இந்தியா்களுடன் தூதரகம் தொடா்ந்து தொடா்பில் உள்ளது. அவா்களுக்குத் தேவையான உதவிகள் அளிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!