13,080 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள்.. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில், ஜவுளித் தொழிலை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கோயம்புத்தூரில் இன்று நடைபெற்ற 'முதலாவது சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 360' (International Textile Summit) நிகழ்வில், தமிழகத்தின் ஜவுளித் துறையில் மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில், ஜவுளி உற்பத்தி சார்ந்த 55 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoUs) கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 912.97 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. இந்த முதலீடுகளின் மூலம் தமிழகத்தில் மொத்தம் 13,080 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

மாநாட்டில் 'தமிழ்நாடு புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2024-25' வெளியீடு மற்றும் மானிய திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 15 ஆண்டுகால பழைய நூற்பு இயந்திரங்களை நவீனப்படுத்தப் பெறப்படும் வங்கி கடனுக்கு 2% வட்டி மானியம் (7 ஆண்டுகளுக்கு) வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சாதாரண விசைத்தறிகளைத் தானியங்கி ரேப்பியர் தறிகளாக மாற்ற 50% மானியமும் (அதிகபட்சம் 1.00 லட்சம் ரூபாய்), புதிய தானியங்கி தறிகள் வாங்க 20% முதலீட்டு மானியமும் வழங்கப்படுகிறது.
புதிய துணி நூல் பதனிடும் ஆலைகளைத் தொடங்கவும், பழைய ஆலைகளை நவீனப்படுத்தவும் 3 நிறுவனங்களுக்கு 10.92 கோடி ரூபாய் முதலீட்டு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டிலிருந்து ஜவுளி ஏற்றுமதியில் சிறந்து விளங்கிய நிறுவனங்களைச் சிறப்பிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

சிறு, குறு, நடுத்தர, பெரிய மற்றும் மிகப் பெரிய ஏற்றுமதியாளர்கள் என 5 பிரிவுகளில் முதலிடம் பெற்ற நிறுவனங்களுக்குத் தலா 2.00 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தமிழகம் இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 33% பங்களிப்பை வழங்கி, கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தனது உரையில் பெருமையுடன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
