தந்தையை காப்பாற்ற சென்ற 2 மகன்களும் பலி; மின் வேலியில் சிக்கி 3 பேரும் உயிரிழந்த சோகம்!
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே, வனவிலங்குகளுக்காகச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஒரு தந்தையும், அவரைக் காப்பாற்றச் சென்ற இரண்டு மகன்களும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் ஒரே நேரத்தில் பலியான இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ராமநாயினிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 55). இவர் அப்பகுதியில் நர்சரி கார்டன் (நாற்றங்கால் பண்ணை) நடத்தி வந்தார். இவரது மனைவி மல்லிகா (50). இவர்களுக்கு விக்காஸ் (25), லோகேஷ் (23), ஜீவா (22) என மூன்று மகன்கள் இருந்தனர்.
மூத்த மகன் விக்காஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசித்து வந்தார். விக்காஸ் மற்றும் இளைய மகன் ஜீவா (22) ஆகியோர் தந்தையுடன் சொந்த ஊரிலேயே இருந்து, நர்சரி கார்டன் பணிகளில் அவருக்கு உதவியாக இருந்துள்ளனர். இரண்டாவது மகன் லோகேஷ் (23) பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

விபத்து நடந்தது எப்படி?
சம்பவத்தன்று இரவு, ஜானகிராமன் தனது மகன்கள் விக்காஸ் மற்றும் ஜீவாவை அழைத்துக்கொண்டு நர்சரி கார்டன் பகுதிக்குப் பணிக்காகச் சென்றுள்ளார். அப்போது, ஜானகிராமன் ஒரு புறமாகவும், இரண்டு மகன்கள் மற்றொரு புறமாகவும் சென்றுள்ளனர்.
திடீரென அந்தப் பகுதியில் இருந்து ஜானகிராமனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. மகன்கள் இருவரும் பதறிப்போய், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு, ஜானகிராமன் தனது நர்சரி கார்டனை ஒட்டி இருந்த பக்கத்து விவசாய நிலத்தில் வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் வேலியில் சிக்கித் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தனர்.
இதனைக் கண்ட விக்காஸும், ஜீவாவும் எந்தத் தயக்கமும் இன்றித் தந்தையைக் காப்பாற்ற விரைந்துள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர்களும் அந்த மின் வேலியில் சிக்கிக் கொண்டனர்.

சம்பவ இடத்திலேயே பலி
உயர் மின்னழுத்தம் பாய்ந்த காரணத்தால், சிறிது நேரத்திலேயே தந்தை ஜானகிராமன் மற்றும் மகன்கள் விக்காஸ், ஜீவா ஆகிய மூன்று பேரும் மின்சாரம் தாக்கித் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களின் தொடர் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்குச் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் மின்வேலியில் சிக்கி உயிரற்றுப் போயிருப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வேப்பங்குப்பம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்சார அலுவலகத்திற்குத் தகவல் கொடுத்து முதலில் மின் இணைப்பைத் துண்டிக்கச் செய்தனர். அதன் பின்னர், உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை
சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரை மின் விபத்தில் பறிகொடுத்த சம்பவம் ராமநாயினிகுப்பம் கிராமத்தில் நீங்கா சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
