ராமேஸ்வரத்தில் +2 மாணவி கொலை ... குற்றவாளிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!
ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டையைச் சேர்ந்த +2 மாணவி ஷாலினி (17) காதலை நிராகரித்ததால், கத்தியால் குத்திக் கொலை செய்த முனியராஜ் (21) ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கொலை, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், நீதிபதி அவரை டிச.3 வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். தற்போது அவர் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் நடந்த நவம்பர் 19 காலை முதலே மாணவியின் உறவினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை முன்பு திரண்டு குற்றவாளிக்கு உடனடி மரண தண்டனை வழங்க வேண்டும் என கோஷமிட்டனர். மாணவியின் உடலை வைத்தியக்கூடத்திற்கு அனுப்ப மறுத்த அவர்கள், ராமேஸ்வரம்–தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
இதையடுத்து ஏஎஸ்பி மீரா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். “குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெறப்படும்; வழக்கு விரைவாக விசாரித்து நீதி வழங்கப்படும்” என உறுதியளித்ததன் பின்னரே மக்கள் சாலை மறியலை கைவிட்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப அனுமதித்தனர்.

இந்தக் கொடூர சம்பவம் ராமேஸ்வரம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கடும் கவலையும் எழுந்துள்ள நிலையில், பல்வேறு அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் குற்றவாளிக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. போலீசார் வழக்கை விரைந்து விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தயாராகி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
