சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 3 நாட்களில் 2.25 லட்சம் பேர் தரிசனம்!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதிலிருந்து ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மண்டல பூஜைக்குப் பின் மகர விளக்கு உற்சவத்திற்காக நடை திறக்கப்பட்ட நிலையில், சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மகர விளக்கு பூஜைக்காகக் கடந்த டிசம்பர் 30-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்று வரை மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

ஜனவரி 19-ம் தேதி வரையிலான தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே முழுமையாக முடிந்துவிட்டது. ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்களுக்காகப் பம்பை உள்ளிட்ட இடங்களில் 'ஸ்பாட் புக்கிங்' (Spot Booking) வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி சபரிமலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நேற்று அதிகாலை முதல் காலை 11 மணி வரை நெய்யபிஷேகம் செய்யப் பக்தர்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தது.
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்குத் தலைமை தாங்கும் ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் தலைமையில் சன்னிதானத்தில் தீபம் ஏற்றி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. மகர விளக்கு சீசனின் முக்கிய நிகழ்வான மகர ஜோதி தரிசனம் வரும் ஜனவரி 14-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வரும் நாட்களில் பக்தர்களின் வருகை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விரிவான பாதுகாப்பு மற்றும் மருத்துவ வசதிகளைத் தேவஸ்தானம் செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
