ஒரே வாரத்தில் 2வது பயங்கரம்... நைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து 100 மாணவர்கள் கடத்தல்!
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாகப் பள்ளி மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, நாட்டின் அதிபர் போலா டினுபு தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ரத்து செய்துள்ளார்.
நைஜீரியாவின் நைஜர் மாகாணம், பாபிரி நகரில் ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே மாணவர்கள் தங்குவதற்கான விடுதியும் அமைந்துள்ளது.

இந்த விடுதிக்குள் நேற்று நள்ளிரவு நேரத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் சிலர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர், விடுதியில் இருந்த சுமார் 100 மாணவர்களை ஆயுத முனையில் மிரட்டி, அந்தக் கும்பல் கடத்திச் சென்றது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. தற்போது நடந்துள்ள இந்தச் சம்பவம், ஒரே வாரத்தில் நைஜீரியாவில் நடக்கும் இரண்டாவது பள்ளி மாணவர் கடத்தல் ஆகும்.
இதற்கு முன்னர், கடந்த நவம்பர் 17 அன்று, கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் இருந்து 25 மாணவிகளை ஆயுதக் கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இந்தச் சம்பவத்தைத் தடுக்க முயன்றபோது, ஆசிரியர் உட்பட இரண்டு பேர் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, கடத்தப்பட்ட மாணவிகளில் இருவர் எப்படியோ தப்பி ஓடி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், மற்ற மாணவிகளை மீட்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக மாணவர்கள் கடத்தப்படுவது, நாட்டின் பாதுகாப்புச் சூழல் குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள அனைத்து உறைவிடப் பள்ளிகளையும் (Residential Schools) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்கம் ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.தற்போது கடத்தல் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ள நிலையில், அதிபர் போலா டினுபு, தனது அனைத்து வெளிநாட்டுப் பயணங்களையும் ஒத்தி வைப்பதாக அவசரமாக அறிவித்துள்ளார். மேலும், கெபி மாகாணத்தில் கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணிக்கு உதவும் வகையில், நாட்டின் பாதுகாப்புத் துறை மந்திரி அல்ஹாஜ்ஜி பெல்லோவை அப்பகுதிக்குச் செல்லவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மந்திரி பெல்லோ, 2021ம் ஆண்டு மேற்கு ஜம்பாரா மாகாணத்தில் கடத்தப்பட்ட 279 மாணவர்களை மீட்பதில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
