கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!
மின்வாரிய ஊழியரான ஒரு நபர், தனது மனைவி மற்றும் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியநாயக்கன்பாளையம் சாந்திமேடு பகுதியில் வசித்து வந்த இக்குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார் கமலேஷ் (48). இவரது மனைவி இலக்கியா (45) செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அக்ஷிதா ஏஞ்சல் (10) ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கமலேஷின் மனைவி இலக்கியா கடந்த நீண்ட நாட்களாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுப் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சைகள் பலனளிக்காமல் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததால், கடந்த சில நாட்களாகக் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். தனது மனைவியின் வலியைப் பார்க்க முடியாமலும், குடும்பத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் கமலேஷ் இந்த விபரீத முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாகக் கமலேஷ் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில், "மனைவியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த காரணத்தாலும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் நாங்கள் அனைவரும் இணைந்து இந்த முடிவை எடுக்கிறோம்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார். இந்த வீடியோவை அவர் தனது நண்பர் ஒருவருக்கு நள்ளிரவில் அனுப்பியுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த நண்பர் அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற பெரியநாயக்கன்பாளையம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் உயிரிழந்து கிடந்தனர். அவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு முழு குடும்பமே இத்தகைய சூழலில் மறைந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மன அழுத்தம் அல்லது தற்கொலை எண்ணங்கள் இருந்தால், தயவுசெய்து கீழ்க்காணும் உதவி எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். சினேகா (Sneha) தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 தமிழக அரசின் உதவி எண்: 104
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
