அரசு மகளிர் விடுதியில் 30 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!
நாமக்கல் - மோகனூர் சாலையில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவிகள் விடுதியில், நேற்று மதிய உணவு உட்கொண்ட முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மதிய உணவாக வழங்கப்பட்ட சாதம் மற்றும் முந்தைய நாள் மீதமான பரங்கிக்காய் சாம்பாரைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, மாணவிகளுக்குத் தொடர் வாந்தியும் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனால் விடுதி வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் செய்தி பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உடனடியாக விடுதிக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். சமையலறையில் இருந்த சாதம், சாம்பார் மற்றும் குடிநீர் உள்ளிட்ட ஒன்பது வகையான உணவு மாதிரிகளைச் சேகரித்து, அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே, உணவு நச்சானதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விடுதி நிர்வாகத்தின் அலட்சியமே இதற்குக் காரணம் எனப் புகார் எழுந்துள்ள நிலையில், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
