மதுபானம் என நினைத்து ரசாயனம் குடித்த 3 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலம் ஜாலோர் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிலர், வேலை முடிந்த பிறகு மது அருந்தத் திட்டமிட்டுள்ளனர். அங்கிருந்த ஒரு பாட்டிலில் இருந்த திரவத்தை மது என்று தவறாகக் கருதி, அதைத் தண்ணீரில் கலந்து 5 தொழிலாளர்கள் குடித்துள்ளனர். உண்மையில் அந்தப் பாட்டிலில் இருந்தது மது அல்ல. பாட்டில் முழுவதும் தொழிற்சாலைப் பயன்பாட்டிற்கான வீரியம் மிக்க நச்சு ரசாயனம் என்பது தெரியாமல் ரசாயனத்தை அருந்திய சில நிமிடங்களிலேயே தொழிலாளர்கள் அனைவரும் மயங்கி சுருண்டு விழுந்துள்ளனர். இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த பாதிப்புக்குள்ளான மற்றொரு தொழிலாளி தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்தத் தொழிலாளர்கள் அறியாமையினால் ரசாயனத்தை அருந்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ரசாயனப் பாட்டில்கள் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் இது போன்ற ரசாயனங்களை மது எனத் தவறாகக் கருதி அருந்தி உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக, முறையான விழிப்புணர்வு இல்லாத கூலித் தொழிலாளர்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
