மஹா சிவராத்திரி 4 கால பூஜை நேரம், வழிபாட்டு முறை, பலன்கள்... முழு தகவல்கள் !

மாதம்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சிவராத்திரி மகா சிவராத்திரியாக அனுஷ்டிக்கப்படுகிறது. மகா சிவராத்திரி சிவபெருமானுக்கான முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. சிவபெருமானின் தாண்டவத்தை காணக் கூடிய கொண்டாட்ட நாள் எனக் கூறலாம். இந்த ஆண்டு மகாசிவராத்திரி திருநாள் இன்று பிப்ரவரி 26ம் தேதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று இரவு முழுவதும் 4 கால பூஜை நேரம் மற்றும் வழிபாடு, நைவேத்தியம் உட்பட பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
26ம் தேதி காலையில் இருந்து மகாசிவராத்திரி விரதத்தை தொடங்கலாம். வீட்டில் இருந்து வழிபாடு செய்பவர்கள் மவுன விரதமும் கடைபிடிக்கலாம். 26ம் தேதி காலை எழுந்து குளித்துவிட்டு சிவபெருமானின் படம் முன்பு அமர்ந்து சிவபெருமானின் பதிகம் படிக்கவும். மாலையில் பூஜை ஆரம்பிக்கும் முன்பாகவும் ஒரு முறை குளிக்கவும்.
சிவராத்திரியில் 4 கால பூஜை
முதல் காலம் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்
இரண்டாம் காலம் இரவு 10.30 மணிக்கு தொடங்கும்
மூன்றாம் காலம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும்
நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கும்
ஒவ்வொரு சிவ ஆலயத்திற்கும் வேறுபடலாம். நீங்கள் மகாசிவராத்திரி நாளில் சிவன் கோயிலுக்கு செல்வதாக இருந்தால் அங்கு செய்யும் வழிபாட்டை பின்பற்றவும். வீட்டில் வில்வ இலைகளை வைத்து சிவாய நமக அர்ச்சனை செய்வது சிறப்பானது.
முதல் கால பூஜை
6 மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி அபிஷேகத்திற்கு தயாராகவும். வீட்டில் சிவபெருமான் சிலை அல்லது லிங்கம் இருப்பது சிறப்பு. மகாசிவராத்திரி முதல் கால பூஜை என்பது சிவபெருமானை பிரம்ம தேவர் பூஜித்த காலம் ஆகும். முதல் கால பூஜையில் சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து பாசிப்பருப்பு கலந்த சர்க்கரை பொங்கலால் நெய் வேத்தியம் படைக்கவும்.
இரண்டாம் காலம்
இது சிவபெருமானை மகாவிஷ்ணு வழிபாடு செய்த காலமாகும். பஞ்சமிர்தத்தால் அபிஷேகம் செய்து பாயாசம், கற்கண்டு பொங்கல் படைக்கவும்.
மூன்றாம் கால பூஜை
சுவாமியுடன் இருக்க கூடிய சர்வ சக்தி படைத்த அம்பாள் வழிபட்ட காலம் இது. மகாசிவராத்திரி நாளில் மூன்றாம் காலம் மிக முக்கியானது. இதை லிங்கோத்பவ நேரம் எனக் குறிப்பிடுவர். பிரம்மனையும், விஷ்ணுவையும் வீழ்த்தியவர் லிங்கோத்பவர். இந்த நேரத்தில் லிங்கத்திற்கு தேன் கொண்டு அபிஷேகம் செய்து, வில்வ இலையினால் அர்ச்சனை செய்து, எள்ளு சாதத்தை நெய் வேத்தியமாக படைக்கவும்.
நான்காவது கால பூஜை
தேவர்கள், ரிஷிகள், மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை வழிபட்ட காலம் இது. கரும்புச்சாறு அபிஷேகம் செய்து சாதத்தில் நெய் விட்டு படைக்கவும்.
மகாசிவராத்திரி வழிபாடு
4 கால பூஜையிலும் திருவாசகத்தை முழுவதும் படித்து புண்ணியம் பெறுங்கள். காலை 6 மணிக்கு தீப ஆராதணை செய்து சிவராத்திரி விரதத்தை நிறைவு செய்யவும். இப்போது நீங்கள் நெய் வேத்தியமாக படைத்த உணவுகளை உட்கொள்ளலாம். 27ம் தேதி மாலை 6 மணிக்கு சிவனை மீண்டும் வழிபட்டு சிவராத்திரி வழிபாட்டை நிறைவு செய்யவும். 26ம் தேதி, 27ம் தேதி மாலை சிவராத்திரி வழிபாட்டை நிறைவு செய்யும் வரை தூங்க கூடாது என்பது ஐதீகம்.
கோயில்களில் வழிபாடு செய்வதாக இருந்தால் வில்வம் இலைகளை அபிஷேகத்திற்கும், பால் மற்றும் தேனை அபிஷேகத்திற்கும் கொடுக்கலாம். கோயில்களில் கொடுக்கும் பிரசாதத்தை சாப்பிடலாம் தவறில்லை.26ம் தேதி மாலை 6 மணி முதல் 27ம் தேதி காலை 6 மணி வரை கண்விழிப்பை சிரமமாக கருதும் நபர்கள் குறைந்தது மூன்றாவது கால பூஜை லிங்கோத்பவராக சிவன் காட்சி கொடுத்த நேரத்தில் 11.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை விழித்திருக்கலாம். கோயில்களில் சிவ பக்தர்களுக்கு திருநீறும், ருத்ராட்சமும் கொடுப்பதால் முழு பலனை பெறலாம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!