தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த 4 நாட்கள் சிறப்பு முகாம்... மிஸ் பண்ணாதீங்க!

 
வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், சுமார் 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் முகவரி மாறியவர்கள் என 66 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் மீண்டும் தங்களது வாக்குகளை உறுதி செய்ய ஒரு மாத காலம் மட்டுமே அவகாசம் உள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் நான்கு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வாக்காளர் தேர்தல் வாக்குப்பதிவு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வரும் டிசம்பர் 27, 28 (சனி, ஞாயிறு) மற்றும் ஜனவரி 3, 4 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. வார இறுதி நாட்களில் இந்த முகாம்கள் நடைபெறுவதால், பணிக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இதனை எளிதாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுவரை 6.11 லட்சம் பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த முகாம்கள் மூலம் விண்ணப்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரைவு பட்டியலில் இருந்து இறந்தவர்கள் தவிர்த்து சுமார் 70 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் பட்டியலில் சேர இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது. ஆனால், இதுவரை பெயர் சேர்ப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள படிவம் 6-களின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளது. இந்த மந்தநிலையைப் போக்கி, தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் இணைப்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. திமுக சார்பில் 65 ஆயிரம் முகவர்களும், அதிமுக சார்பில் 64 ஆயிரம் முகவர்களும் இந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்காளர் பட்டியல்

புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் படிவம் 6-ஐயும், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர் படிவம் 7-ஐயும் பயன்படுத்தலாம். ஒரு முகவர் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 50 விண்ணப்பப் படிவங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. ஜனவரி 18-ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாள் என்பதால், பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தித் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலேயே இதற்கான படிவங்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!