இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 5 இந்திய மாணவர்கள் காயம்... 110 பேர் டெல்லி வருகை!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் அமைந்துள்ள தெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்த 5 இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த தகவலை ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.இஸ்ரேல்-ஈரான் மோதலின் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ தாக்குதலில் ஈரானின் அணு ஆயுத மையங்கள், இராணுவ தளங்கள், மற்றும் குடியிருப்பு பகுதிகள் குறிவைக்கப்பட்டன. இதில், தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள மாணவர் விடுதியும் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவர்களில் மூவர் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள், 2 பேர் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்கள் 5 பேரும் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்கள் ஆவர், அவர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் தெஹ்ரான் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் எம்.பி. ஆகா சையத் ருஹுல்லா மெஹ்தி, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவோ அல்லது விமானப் போக்குவரத்து திறக்கப்பட்டவுடன் இந்தியாவுக்கு அழைத்து வரவோ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம் இந்திய தூதரகம், தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 24/7 கட்டுப்பாட்டு அறையை அமைத்திருப்பதாகவும் வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, இந்திய அரசு ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் வடக்கு பகுதிகளில், குறிப்பாக தெஹ்ரான் மற்றும் உர்மியாவில் மருத்துவக் கல்வி படித்து வந்த 110 இந்திய மாணவர்கள், ஜூன் 17, 2025 அன்று இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைப்புடன் பாதுகாப்பாக அர்மேனியாவுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஜூன் 18 அன்று மாலை 2:45 மணிக்கு யெரெவானின் ஸ்வார்ட்நோட்ஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு, ஜூன் 19 அதிகாலை டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர். மேலும், ஜம்மு-காஷ்மீர் மாணவர் சங்கம், பிரதமர் மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்து, “மீதமுள்ள மாணவர்களும் விரைவில் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என நம்புகிறோம்,” என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!