உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில், இப்போது பொதுமக்களின் போக்குவரத்தான ரயில்வே துறையும் இலக்காகியுள்ளது.
கார்கீவ் பிராந்தியத்தில் உள்ள பார்வின்கோவ் (Barvinkove) சமூகத்திற்கு உட்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷ்யாவின் 'ஷாஹெட்' ரக ட்ரோன்கள் மூன்று முறை தாக்குதல் நடத்தின. ஒரு ட்ரோன் ரயிலின் பெட்டி ஒன்றின் மீது நேரடியாக மோதியதில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
தாக்குதலின் போது ரயிலில் மொத்தம் 291 பயணிகள் இருந்தனர். பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பெட்டியில் மட்டும் 18 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரயில் தாக்குதலுக்கு ஒரு நாள் முன்னதாக, உக்ரைனின் முக்கியத் துறைமுக நகரான ஒடிசாவில் (Odesa) ரஷ்யா சுமார் 50-க்கும் மேற்பட்ட ட்ரோன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடும் குளிர்காலம் நிலவி வரும் சூழலில், உக்ரைன் மக்களின் மின்சார வசதி மற்றும் வெப்பமூட்டும் (Heating) கட்டமைப்புகளைச் சிதைப்பதே ரஷ்யாவின் நோக்கமாக உள்ளது. இதன் மூலம் மக்களைச் சரணடைய வைக்க ரஷ்யா முயற்சிப்பதாக ஐநா மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
"எந்த ஒரு நாட்டிலும் ஒரு சிவிலியன் ரயில் மீது தாக்குதல் நடத்துவது பயங்கரவாதமாகவே கருதப்படும். இதற்கு எவ்வித ராணுவ நியாயமும் இல்லை" என்று அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, உக்ரைனுக்குக் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளை (Air Defense Systems) வழங்குமாறு மேற்கத்திய நாடுகளுக்கு உக்ரைன் கோரிக்கை விடுத்துள்ளது.அமைதிப் பேச்சுவார்த்தை: கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அமெரிக்காவின் முயற்சியால் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த போதிலும், ரஷ்யாவின் தாக்குதல்கள் குறையவில்லை. பிப்ரவரி 1-ம் தேதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
