500 ஆண்டுகள் பழமையான வத்தலக்குண்டு ஸ்ரீ கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்குத் தெருவில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கருப்பண்ணசாமி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களின் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் பழமையான ஆலயங்களில் புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு, குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.
இந்தக் கோவிலில் 500 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி முன்னோர்கள் நட்டு வைத்த அரிவாள்களைத்தான் இன்றும் மக்கள் காவல் கருப்பண்ணசாமியாகப் பழமை மாறாமல் வழிபட்டு வருகின்றனர்.

புதிய கோபுரங்கள் கட்டப்பட்டதையடுத்துக் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது: ஸ்ரீ லட்சுமி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூன்று நாட்கள் யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், புதிய கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றிப் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆலயத் திருப்பணி மற்றும் குடமுழுக்கு ஏற்பாடுகளை கல்யாண சுந்தரம், முத்துப்பாண்டி, முத்துராமலிங்கம், பாண்டி, திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சி மன்றத் தலைவர் சிதம்பரம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
