அயோத்தியில் 52 ஏக்கரில் கோயில் அருங்காட்சியகம்: சர்வதேச தரத்தில் அமைப்பு!

 
அயோத்தியில் அருங்காட்சியகம்

ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரைச் சர்வதேச கலாச்சார மற்றும் ஆன்மிகத் தலமாக மேம்படுத்தும் நோக்கில், அங்கு பிரம்மாண்டமான கோயில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலத்தை உத்தரப் பிரதேச அரசு நேற்று வழங்க ஒப்புதல் அளித்தது. டாடா சன்ஸ் நிறுவனம் தனது சமூகப் பொறுப்பு நிதியைப் (CSR Fund) பயன்படுத்தி, இந்த அருங்காட்சியகத்தை உருவாக்கவும் இயக்கவும் பொறுப்பேற்றுள்ளது.

அயோத்தியில் கோயில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக, கடந்த வருடம் செப்டம்பர் 3-ஆம் தேதி மத்திய அரசு, உ.பி. அரசு மற்றும் டாடா சன்ஸ் நிறுவனம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலில் அயோத்தியின் மஞ்சா ஜம்தாரா கிராமத்தில் 90 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

அயோத்தி

அருங்காட்சியகத்தை சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாகக் கட்ட, டாடா சன்ஸ் கூடுதல் நிலம் கோரியது. இதை ஏற்ற முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. தற்போது கூடுதலாக 27.102 ஏக்கர் சேர்த்து, மொத்தம் 52.102 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. டாடா சன்ஸ் நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். நிதியைப் பயன்படுத்தி இந்த கோயில் அருங்காட்சியகத்தை அதிநவீன முறையில் உருவாக்கி, இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளது.

இந்த அருங்காட்சியகத்தை திராவிடப் பாணிக் கட்டடக்கலையில், சர்வதேச நிபுணத்துவம் மற்றும் தர உத்தரவாதத்துடன் ஒரு குழுவுடன் இணைந்து டாடா சன்ஸ் அமைக்க உள்ளது. இந்தத் திட்டம் மூலம் அயோத்திக்கு ஒரு புதிய கலாச்சார அடையாளம் கிடைப்பதுடன், நகரத்தின் சுற்றுலாவும் பெரிய அளவில் மேம்படும். இது நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளது.

அயோத்தி ராமர்

அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவுக்குப் பிறகு, தற்போது தினமும் சுமார் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்கள் வருகை தருகின்றனர். இந்த அருங்காட்சியகம் மூலம் அயோத்தியின் கலாச்சார இடங்கள் விரிவுபடுத்தப்பட்டு, சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!