53 நாட்கள் சிறைவாசம்... இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள், இன்று காலை இந்தியக் கடலோரக் காவல் படையினரால் பாதுகாப்பாகத் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.
கடந்த நவம்பர் 2, 2025 அன்று ராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளையில் இருந்து பாலமுருகன் (30), தினேஷ் (18), குணசேகரன் (42), ராமு (22) ஆகிய 4 மீனவர்கள் ஒரு பைபர் படகில் கடலுக்குச் சென்றனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டியதாகக் கூறி இலங்கை கடற்படையினர் அவர்களைக் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு சென்றனர்.

சுமார் 53 நாட்களாக இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த இந்த மீனவர்கள், நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தது. இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் தலையிட்டு அந்த அபராதத் தொகையைச் செலுத்தினர்.
இலங்கை கடற்படை கப்பலில் அழைத்து வரப்பட்ட 4 மீனவர்களும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்தியக் கடலோரக் காவல் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அங்கிருந்து இந்தியக் கப்பல் மூலம் இன்று காலை நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா ஆறுகாட்டுத்துறைக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

தமிழகம் வந்த மீனவர்களிடம் கடலோரக் காவல் குழுமப் போலீசார், மீன்வளத் துறையினர் மற்றும் கியூ பிரிவு போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதன்பின் அவர்கள் தங்களின் சொந்த ஊரான நம்புதாளைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீனவர்கள் விடுதலையாகித் திரும்பியிருப்பது அவர்களின் குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் இன்னும் இலங்கை வசமே இருப்பது மீனவ அமைப்புகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
