சென்னையில் இன்றும் 71 இண்டிகோ விமானங்கள் ரத்து.. 7வது நாளாக சேவைகள் பாதிப்பு!
விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் மற்றும் விமானப் பணிக் குழு பற்றாக்குறை காரணமாக, இண்டிகோ விமானச் சேவைகள் நாடு முழுவதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (திங்கள்கிழமை) சென்னை விமான நிலையத்தில் மட்டும் 71 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று சென்னையில் இருந்து புறப்படவிருந்த 38 விமானங்களும், சென்னைக்கு வரவிருந்த 33 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் இன்றுடன் 7-வது நாளாக இண்டிகோ விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விமானிகள் மற்றும் விமானப் பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய விமானப் பணிக் குழுவுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையே இந்தச் சேவை பாதிப்புக்கு முக்கியக் காரணமாகும். இந்தப் பற்றாக்குறை புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பல்வேறு நகரங்களில் விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுவதால் ஆயிரக்கணக்கானப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் மற்றும் தாமதமான விமானச் சேவைகளுக்காகப் பயணிகளுக்கு இதுவரை ரூ. 610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் விமானச் சேவைகள் நிலைமை சீராக்கப்படும் என்று நம்புவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
