ஒரே மாவட்டத்தில் 75,000 வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்... இறந்தவர்கள் மட்டும் 54,000 பேர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுகுமார் அறிவித்துள்ளார். அதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 54,000க்கும் அதிகம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சுகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலைச் சுத்திகரிக்கும் எஸ்.ஐ.ஆர் (Special Intensive Revision) பணிகள் குறித்துப் பேசப்பட்டது.

கூட்டத்தில் கலெக்டர் சுகுமார் பேசுகையில், எஸ்.ஐ.ஆர் பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள், தகுதியான எந்தவொரு வாக்காளரையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் இருந்து விடுபடக் கூடாது என்றும், அதே நேரத்தில் தகுதியற்ற நபர்களை வாக்காளராகச் சேர்க்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதற்காக, நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த கணக்கீட்டுப் படிவங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி பிஎல்ஓ (BLO) மொபைல் செயலி மூலம் விரைவாக நடந்து வருகிறது.
நேற்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி, மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் சுமார் 7 லட்சத்து 27 ஆயிரத்து 583 கணக்கீட்டுப் படிவங்கள் (51.30 சதவீதம்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் கலெக்டர் தகவல் அளித்தார். அப்போதுதான், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படக்கூடிய நபர்கள் குறித்த அதிர்ச்சியூட்டும் விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

கலெக்டர் சுகுமாரின் தகவலின்படி, நெல்லை மாவட்டத்தில் இதுவரை கண்டறியப்பட்டதில் 54 ஆயிரத்து 913 பேர் இறந்துள்ளனர். இதைத் தவிர, 1,195 பேர் தாங்கள் குறிப்பிட்ட முகவரியில் இல்லாததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும், 18 ஆயிரத்து 933 பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு மாறிச் சென்றுள்ளனர். இவ்வாறு மொத்தம், 75 ஆயிரத்து 41 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள், மாறிச் சென்றவர்கள், கண்டறிய முடியாதவர்கள் என ஒரே மாவட்டத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபடும் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் அரசியல் கட்சியினர் உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கலெக்டர் சுகுமார் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
