மதுபான விடுதியில் புகுந்து துப்பாக்கிச்சூடு - 9 பேர் உடல் சிதறிப் பலி... தென்னாப்பிரிக்காவில் பயங்கரம்!
தென்னாப்பிரிக்காவின் பெக்கர்ஸ்டால் நகரில் நள்ளிரவில் அரங்கேறியுள்ள இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து சுமார் 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மதுபான விடுதியில், மக்கள் உற்சாகமாக இருந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறையைக் கொண்டாட வந்திருந்த அப்பாவி மக்கள் மீது, அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய இந்த வெறிச்செயலால் அந்த இடமே ரத்தக் காடாக மாறியுள்ளது.

அதிகாலை 1 மணியளவில், ஒரு மினி பேருந்து மற்றும் காரில் வந்த சுமார் 12 பேர் கொண்ட மர்ம கும்பல், திடீரென மதுபான விடுதிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்த மக்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்தச் சம்பவத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள், அந்தத் தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியது. அப்படிச் செல்லும் வழியிலும் அவர்கள் கண்ணில் பட்டவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகப் போலீஸார் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார், அவர்களது நோக்கம் என்ன என்பது குறித்து இதுவரை எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை. தலைமறைவாக உள்ள அந்த 12 பேரையும் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் கடந்த மூன்று வாரங்களில் நடைபெறும் இரண்டாவது மிகப்பெரிய துப்பாக்கிச் சூடு இது என்பதால், அந்நாட்டு மக்கள் கடும் பீதியில் உள்ளனர். அங்கு அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தச் சம்பவம் காரணமாகப் பெக்கர்ஸ்டால் நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
