900 காளைகள்... 2026-ன் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் அதிக அளவில் நடைபெறும் மாவட்டமான புதுக்கோட்டையில், இந்த ஆண்டின் முதல் போட்டி இன்று மிக விமரிசையாகத் தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில், தச்சங்குறிச்சி புனித விண்ணேற்பு அன்னை ஆலயத் திருவிழா மற்றும் புத்தாண்டை முன்னிட்டு இந்தப் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இன்றைய போட்டியில் சுமார் 900 காளைகளும், அவற்றை அடக்க 300 மாடுபிடி வீரர்களும் களமிறங்குகின்றனர்.

தமிழக அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சி.வி. மெய்யநாதன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் வாடிவாசலைத் திறந்து வைத்துப் போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் மற்றும் வீரர்களுக்குக் காயம் ஏற்படாத வண்ணம் தேங்காய் நார் கழிவுகள் பரப்பப்பட்டுள்ளன.
காளைகளின் உடல்நிலையைப் பரிசோதிக்கப் கால்நடை மருத்துவர்களும், வீரர்களைப் பரிசோதிக்கச் சுகாதாரத் துறையினரும் தயார் நிலையில் உள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி மற்றும் ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகள் நடைபெறும் மாவட்டம் என்ற தனிச் சிறப்பினைப் புதுக்கோட்டை பெற்றுள்ளது. தச்சங்குறிச்சி போட்டியைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்படைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
