90ஸ் கிட்ஸ் பேவரைட்... தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் சரளா மகேஸ்வரி காலமானார்!
80 மற்றும் 90-களில் இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி மிகவும் பிரபலமானவர் சரளா மகேஸ்வரி (71). இவர் இன்று டெல்லியில் காலமானார். இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில், குறிப்பாகக் கருப்பு-வெள்ளை காலத்திலிருந்து வண்ணத் தொலைக்காட்சி காலம் வரை செய்தி வாசிப்பில் ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் சரளா மகேஸ்வரி.
வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகத் டெல்லியில் இன்று அவர் காலமானார். அவரது மறைவிற்குத் தூர்தர்ஷன் நேஷனல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. "அவரது மென்மையான குரல், துல்லியமான உச்சரிப்பு மற்றும் கண்ணியமான செய்தி வழங்கல் முறை இந்திய செய்தி உலகில் அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தது" என்று தூர்தர்ஷன் புகழ்ந்துரைத்துள்ளது.

சரளா மகேஸ்வரி வெறும் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர், கவிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். மேற்கு வங்கத்திலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர். இவர் சுமார் 16-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். இலக்கியம் மற்றும் இதழியல் துறையில் இவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.
80-களில் தூர்தர்ஷன் மட்டுமே பிரதானமாக இருந்த காலத்தில், இவரது தெளிவான இந்தி உச்சரிப்பும், அமைதியான முறையில் செய்திகளை வாசிக்கும் விதமும் கோடிக்கணக்கான நேயர்களைக் கவர்ந்தது. அன்றைய காலகட்டத்தில் ஷம்மி நாரங் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து இவர் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
அவரது உடல் டெல்லியில் உள்ள நிகம் போத் காட் மயானத்தில் இன்று மாலை 4 மணியளவில் தகனம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மறைவு செய்தித் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
