சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு...திமுக பிரமுகரைத் தாக்கிய விவகாரம்!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் நடைபெற்றப் பொதுக் கூட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன் காரை மறித்து கோஷமிட்ட திமுக பிரமுகர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்பட்டச் சம்பவம், தற்போது பெரும் சட்டப் பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட திமுக பிரமுகர் அளித்தப் புகாரின் அடிப்படையில், சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாச்சலத்தில் நேற்று (டிசம்பர் 14) மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். கூட்டம் சுமூகமாக நடந்து முடிந்தது. கூட்டத்தை முடித்துவிட்டுச் சீமான் காரில் ஏறிப் புறப்படத் தயாரானபோது, திடீரென அங்கு வந்த கிழக்கு மாவட்ட திமுக வர்த்தக அணி நிர்வாகி ரங்கன், சீமானின் காரை மறித்து "சீமான் ஒழிக!" என்று கோஷமிட்டுள்ளார். அத்துடன் அவர் சில மோசமான கருத்துகளையும் சொல்லிச் சீமானைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

திமுக பிரமுகர் கோஷமிட்டதைக் கேட்ட அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அவரைச் சுற்றி வளைத்தனர். அப்போது, திடீரெனக் காரில் இருந்து இறங்கி வந்த சீமான், அந்த நபரைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, அங்கு அதிகளவில் இருந்த நாம் தமிழர் கட்சியினரும் அந்த திமுக பிரமுகரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் அந்த நபரின் சட்டை கிழிந்து அவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அங்கிருந்த போலீசார் உடனடியாகத் தலையிட்டு திமுக பிரமுகரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

இந்த மோதல் சம்பவம் தொடர்பாகக் கடலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திமுக பிரமுகர் ரங்கன் அளித்தப் புகாரின் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, நாம் தமிழர் கட்சியினர் அளித்தப் புகாரின் அடிப்படையில், திமுக பிரமுகர் ரங்கன் மீதும் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
