ரூ.5 லட்சம் ரொக்கம், 1 சவரன் தங்கப்பதக்கம்... தமிழக அரசின் 'இலக்கிய மாமணி' விருதுகள் அறிவிப்பு!
சென்னை: தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் பங்காற்றி வரும் அறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில், 2025-ஆம் ஆண்டிற்கான 'இலக்கிய மாமணி' விருதுகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவாக 2021-ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இந்த விருது உருவாக்கப்பட்டது. மரபுத்தமிழ், ஆய்வுத்தமிழ் மற்றும் படைப்புத்தமிழ் ஆகிய மூன்று துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

2025-ஆம் ஆண்டின் விருதாளர்கள்:
1. மரபுத்தமிழ் வகைப்பாடு - த. இராமலிங்கம் (வயது 68): உலகின் பல்வேறு நாடுகளில் கம்பன் மற்றும் தமிழ் இலக்கியம் குறித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வருபவர். 'தினமணி' நாளிதழில் 'கம்பன் தமிழமுதம்' தொடர் மூலம் வாசகர்களைக் கவர்ந்தவர். சென்னை கம்பன் கழகத்தின் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவர்.
2. ஆய்வுத்தமிழ் வகைப்பாடு - சி. மகேந்திரன் (வயது 73): 'தாமரை' இலக்கிய இதழின் ஆசிரியராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருபவர். 'வீழ்வேன் என்று நினைத்தாயோ?', 'தீக்குள் விரலை வைத்தேன்' உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் ஆவார்.
3. படைப்புத்தமிழ் வகைப்பாடு - இரா. நரேந்திரகுமார் (வயது 74): விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், திராவிடச் சிந்தனையாளர் மற்றும் சிறந்த கட்டுரையாளர். 'நம்நாடு', 'வைகறை முரசு' இதழ்களில் தொடர்ந்து எழுதி வருபவர். ராஜபாளையத்தில் பல இலக்கிய நிகழ்வுகளை நடத்தி இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வருபவர்.
விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த மூன்று அறிஞர்களுக்கும் தலா ₹5 லட்சம் ரொக்கப்பரிசு, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை வழங்கிச் சிறப்பிக்கப்படும். இந்த விருதுகளை வரும் ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினத்தில்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
