இன்று முதல் ரூ.5,000 அபராதம்... 98,000 வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் இல்லை - வீடு வீடாக ஆய்வு!
சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமம் பெறுவதற்கானக் கால அவகாசம் முடிந்த நிலையில், உரிமம் பெறாத 98,000-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு இன்று (திங்கள்கிழமை, டிசம்பர் 15) முதல் அபராதம் விதிக்கச் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, உரிமம் பெறாத நாய்கள் வைத்திருப்போர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மொத்தம் சுமார் 1.50 லட்சத்துக்கும் மேலான வளர்ப்பு நாய்கள் இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாநகராட்சி அறிவுறுத்தியதன் பேரில், ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி, மைக்ரோ சிப் பொருத்தி உரிமம் பெறவும், அதற்கானச் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு, காலக்கெடு நான்கு முறை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 57,602 வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி கால்நடைப் பிரிவு இணையதளத்தில் பதிவு செய்துள்ள 98,023 வளர்ப்பு நாய்களுக்கு இன்னமும் உரிமம் பெறப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. உரிமம் பெறாத வளர்ப்பு நாய்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கும் தீர்மானம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது.

உரிமம் பெறுவதற்கானக் காலக்கெடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முடிந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை, டிசம்பர் 15) முதல் அபராதம் விதிக்கும் பணி தொடங்குகிறது. அபராதம் விதிக்கும் வகையில், இன்று முதல் மண்டல வாரியாகத் தலா ஒரு சிறப்பு குழு என மொத்தம் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் கால்நடைப் பிரிவு மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் உரிமம் பெறாத நாய்களைக் கண்டறிந்து, உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
