ஜனவரி 2 வது வாரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
தமிழகத்தில் புத்தாண்டு பிறந்தது முதல் மழையின் ஆட்டம் ஓயவில்லை. தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வரும் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் ஜனவரி இரண்டாவது வாரத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. தற்போதைக்கு புயல் சின்னம் உருவாக வாய்ப்பில்லை என்றாலும், மழையின் வேகம் குறையாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் பேய் மழை கொட்டித் தீர்த்தது. இதில் குன்னூரில் மட்டும் 21 சென்டிமீட்டர் மழையும், கோத்தகிரியில் 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி அந்தப் பகுதியையே வெள்ளக்காடாக மாற்றியுள்ளது. இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் குற்றால அருவிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது வெள்ளம் சற்று குறைந்திருந்தாலும், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்றும் நீடிக்கிறது.

இன்று தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் தொடர்வதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புத்தாண்டு மழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
