ரயிலில் கெட்டிலில் நூடுல்ஸ் சமைத்த பெண்.. வீடியோ வைரலானதால் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை!
ரயில் பயணத்தின்போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற மின் சாதனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற ரயில்வே விதியை மீறி, ஏ.சி. பெட்டியில் பயணித்த பெண் ஒருவர் நூடுல்ஸ் சமைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தற்போது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ காட்சி வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டது. அந்த வீடியோவில், நடுத்தர வயதுள்ள ஒரு பெண், ரயிலில் ஏ.சி. வகுப்பு பெட்டியில் அமர்ந்திருந்தார். அவர், இருக்கைக்கு அருகே உள்ள செல்போன் சார்ஜிங் பாயிண்ட்டில் எலெக்ட்ரிக் கெட்டில் சாதனத்தை இணைத்து, நூடுல்ஸ் சமைக்கத் தொடங்கினார்.
Is this train travel hack to cook food in train is okay?
— Woke Eminent (@WokePandemic) November 20, 2025
Is this legal? pic.twitter.com/tuxj9qsoHv
இதனை உடனிருந்த சக பயணி ஒருவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளார். வீடியோவில் அந்தப் பெண் மராத்தி மொழியில், “இந்தச் சாதனத்தைப் பயன்படுத்தி நான் இதுவரை 10 பேருக்கு டீ போட்டுக் கொடுத்திருக்கிறேன்” என்று பெருமையாகப் பேசுகிறார். ரயில்வே விதிகளை மீறி, பொதுப் பயணிகளுக்கு மத்தியில் பெண் சமையல் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமூக வலைதளங்களில் பலரும் அந்தப் பெண் பயணியின் செயலுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதை அடுத்து, மத்திய ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
மத்திய ரயில்வே அதிகாரி ஒருவர் இது குறித்துத் தெரிவிக்கும் போது, "இந்த வீடியோவில் இருக்கும் பெண் பயணியைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ரயில்வே சட்டத்தின் பிரிவு 147(1)-இன் கீழ், பொதுச் சொத்துக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டதற்காக அந்தப் பெண் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

மேலும், மத்திய ரயில்வே நிர்வாகம் தங்களுடைய 'எக்ஸ்' (X) தளத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “ரயில் பயணத்தின் போது எலெக்ட்ரிக் கெட்டில் போன்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் சாதனங்களைப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள், தீ விபத்து உள்ளிட்ட பெரும் ஆபத்துகளை விளைவிக்க வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு மீண்டும் அறிவுறுத்தப்படுகிறார்கள்,” எனக் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் ரயில்வே சட்டதிட்டங்களைப் பின்பற்றி, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதே நிர்வாகத்தின் வேண்டுகோளாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
