தனிமனித விமர்சனங்கள் அழகல்ல என்பதை உணர்ந்தேன்... ஆதவ் அர்ஜுனா வருத்தம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் காணொலியில் பேசிய பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் புல்வெளியில் நடந்தபடி ஆதவ் அர்ஜுனா பேசுவது இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோவுக்கு ஆதவ் அர்ஜுனா வருத்தம் தெரிவித்துள்ளார். அதில் “எனது தனிப்பட்ட உரையாடல் குறித்த காணொளி ஒன்று பொதுவெளியில் வெளியானது.

ஜனநாயகத்தின் மீது எப்போதும் நம்பிக்கை கொண்டவன் நான். அதைத் தாண்டி, எந்தவித தனிநபர் தாக்குதலையும், முரண்பாடுகளையும் எப்போதும் எனது பொதுவாழ்வில் நான் கடைப்பிடித்தது கிடையாது. என்னுடன் பயணிப்பவர்களுக்கு அது நன்கு தெரியும். என்னுடைய அரசியல் பயணத்தில் எத்தனையோ விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லாம் என் மீது முன்வைக்கப்படும் பொழுது, எந்த இடத்திலும், யார் மீதும் தரம் தாழ்ந்த விமர்சனங்களை நான் வைத்தது கிடையாது.

உண்மையும், நேர்மையும் கொண்ட ஒரு புதிய மக்கள் அரசியலைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற ஆவலுடனே நான் இந்த அரசியல் களத்திற்கு வந்தேன். தனிமனித விமர்சனங்கள் ஜனநாயக அரசியலுக்கு அழகல்ல எனும் கொள்கையை உறுதியாகக் கொண்டுள்ளேன். அப்படியிருக்கையில், அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகபூர்வ பொது வாழ்வில் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நிகழ்வையும் எனது அரசியல் வாழ்வில் ஒரு கற்றலாகவே நான் எடுத்துக்கொள்கிறேன். அந்தவகையில், கொள்கைக்கான அரசியலையும், வெளிப்படைத்தன்மையான ஜனநாயகத்தையும் என்றும் மதித்து பயணிப்பதே எனது இலக்கு” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
