ஆவின் பால் விநியோகத்தில் சிக்கல் - தொழிலாளர் தட்டுப்பாட்டால் விநியோகம் 60% முடக்கம் - முழுமையாகப் பாதிக்கும் அபாயம்!
சென்னையில் ஆவின் பால் விநியோகத்தின் முக்கிய மையமான மாதவரம் பால் பண்ணையில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கலால், இன்று வடசென்னை மக்கள் பால் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.மாதவரம் பால் பண்ணையில் பணியாற்றி வந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஒப்பந்தம் கடந்த மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைந்தது. புதிய ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர் போதிய தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தாததே இந்தப் பாதிப்புக்கு முக்கியக் காரணமாகும்.

பண்ணை இயங்க சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படும் நிலையில், வெறும் 8 தொழிலாளர்களை மட்டுமே கொண்டு கடந்த ஒரு வாரமாகப் பண்ணை இயங்கி வந்துள்ளது.தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து வந்த வாகன ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள், இன்று அந்தப் பணிகளைச் செய்ய மறுத்துவிட்டனர். இதனால் பால் பாக்கெட்டுகளை வாகனங்களில் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.
மாதவரம் பண்ணையில் இருந்து பால் விநியோகம் செய்யப்படும் பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொடுங்கையூர் மற்றும் கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் சுமார் 60 சதவீதத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளது.நிலைமையைச் சமாளிக்க ஆவின் நிர்வாகம், சில விநியோக வாகனங்களை அம்பத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளுக்குத் திருப்பி விட்டுள்ளது. இருப்பினும், இது வடசென்னை மக்களின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை.
இது குறித்துத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கூறுகையில், "மாதவரம் பண்ணையில் நிலவும் இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால், நாளை வடசென்னை முழுவதும் ஆவின் பால் விநியோகம் முற்றிலுமாக முடங்கும் ஆபத்து உள்ளது. தமிழக முதல்வரும், பால்வளத் துறை அமைச்சரும் இதில் உடனே தலையிட வேண்டும்" என்றார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
