விபத்து இழப்பீடு பாக்கி... கோவையில் அரசுப் பேருந்து ஜப்தி!
விபத்தில் காலை இழந்த தூய்மைப் பணியாளருக்கு வழங்க வேண்டிய ₹25 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தாமதம் செய்ததால், அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சொந்தமான பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (45). தூய்மைப் பணியாளரான இவர், கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். இந்த கோர விபத்தில் அவரது வலது கால் துண்டிக்கப்பட்டது. தனது வாழ்வாதாரத்தை இழந்த விஜயகுமார், இழப்பீடு கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு வட்டியுடன் சேர்த்து ₹25 லட்சம் இழப்பீடு வழங்க அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

நீதிமன்றம் உத்தரவிட்டும் பல மாதங்களாக இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பு, மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து, தொகையைச் செலுத்தாத போக்குவரத்துக் கழகத்தின் சொத்துக்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா யோகா மையம் செல்லும் வழித்தடத்தில் (தடம் எண்: 14D) இயக்கப்பட்ட அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் வழிமறித்து ஜப்தி செய்தனர். பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கிவிடப்பட்டு, பேருந்து நேராகக் கோவை நீதிமன்ற வளாகத்திற்குக் கொண்டு வரப்பட்டு நிறுத்தப்பட்டது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
