பிரபல நடிகர் ஆஷிஷ் வித்யார்த்திக்கு விபத்து.. மனைவியுடன் செல்கையில் கார் மோதியதால் பரபரப்பு!
தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த மூத்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கினார். அதிர்ஷ்டவசமாக அவரும் அவரது 2வது மனைவியும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அவரது மனைவி ரூபாலி பரூவா ஆகியோர் அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் தங்கியிருந்தனர். நேற்று மாலை அவர்கள் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் லேசான காயங்கள் ஏற்பட்டன.
இந்த விபத்து குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆஷிஷ் வித்யார்த்தி உடனடியாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வீடியோவில் அவர்"இது ஒரு மிகச்சிறிய விபத்துதான். பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. நான் மற்றும் என் மனைவி ரூபாலி ஆகிய இருவருமே தற்போது நலமாக இருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம்," எனத் தெரிவித்துள்ளார். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டே, சமீபகாலமாகச் சிறந்த 'புட் வ்லாகர்' (Food Vlogger) ஆகவும் ஆஷிஷ் வித்யார்த்தி வலம் வருகிறார்.

இந்தியா முழுவதும் பயணம் செய்து பல்வேறு உணவகங்களைப் பற்றி அவர் பதிவிடும் வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக அசாம் சென்றிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நலமாக இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
