"நடிகர் சூரி ஹோட்டல்ல செப்டிக் டேங்க் நடுவுலதான் சமைக்குறாங்க.." கலெக்டருக்கு பறந்த புகார்!

 
சூரி


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் பெருச்சாளி, கரப்பான் பூச்சி சுற்றித் திரியும் செப்டிங்டேங்க் அருகே உணவு தயாரித்து சுகாதாரமற்ற நிலையில் செயல்பட்டு வருவதாகவும், உணவகத்திற்கு சீல்வைக்க கோரியும் வீடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுப்பணி துறை ஒப்பந்தம் மூலம் கடந்த ஜூன் 2022ம் ஆண்டு நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் தொடங்கப்பட்டது. பொதுப்பணி துறையினரால் 434 சதுரடி பரப்பு மட்டுமே அம்மன் உணவகம் செயல்பட அனுமதி வழங்கபட்டுள்ளது.

சூரி

இந்நிலையில் அம்மன் உணவக நிர்வாகத்தினர் செவிலியர் விடுதியில் கழிவுநீர் தொட்டி அமைந்திலுள்ள இடத்தில் விதிமுறைகளை மீறி கூடுதலாக 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 சதுர அடி திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளதாக கூறி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான முத்துக்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார். தனது புகார் மனுவுடன் வீடியோ, புகைப்பட ஆதாரங்களையும் இணைத்துள்ளார். 

அந்த மனுவில்,  அம்மன் உணவகத்தின் அருகே அமைந்துள்ள 10க்கும் மேற்பட்ட கழிவுநீர் தேங்கும் செப்டிக் டேங்க்குகளின் நடுவே தான் காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகள் இரவு பகலாக நடந்து வருவதாகவும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் வசிக்கும் இடமாக அந்த இடம் அமைந்துள்ளதாகவும், செவிலியர் விடுதியின் ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அந்த பகுதியில் அடுக்கி வைத்திருப்பதால் விடுதியில் தங்கியிருக்கும் செவிலியர்களும், செவிலிய ஆசிரியைகள் ஜன்னலை திறக்க முடியாமல் எப்போதும் மூடியே வைத்துள்ளனர்.

இதனால் அங்கு தங்கியுள்ள செவிலிய மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும், அம்மன் உணவகத்தின் அருகில் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது. இதனால் கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் நோய் தொற்று உருவாகும் நிலை உள்ளது எனவும்,

சூரி

இது போன்று சட்டத்திற்கு புறம்பாக பொதுப்பணி துறையின் ஒப்பந்த முறைகளை மீறி முழு ஆக்கிரமிப்பு செய்தும், சுகாதாரமற்ற முறையிலும் தரமற்ற வகையில் உணவுகளை தயாரித்து கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் அம்மன் உணவகத்தில் அதிகாரிகளை நியமித்து ஆய்வு செய்து சீல் வைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய சமூக ஆர்வலர் முத்துக்குமார், ‘மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளேன்' என்றார்.

நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் சுகாதார கேடு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!