அரசுப் பள்ளிகளில் குவியும் மழலையர்... 20 நாட்களில் 44000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை!
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்ந்த நிலையில், வரும் புதிய கல்வியாண்டில் அந்த எண்ணிக்கையை ஐந்து லட்சமாக உயர்த்தத் தொடக்கக் கல்வித் துறை அதிரடி இலக்கு நிர்ணயித்துள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில்தான் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை தொடங்கும் என்ற நிலையை மாற்றி, இந்த ஆண்டு தனியார் பள்ளிகளுக்குப் போட்டியாக மார்ச் மாதமே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், கடந்த 2 ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து வருகின்றனர்.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிந்து, அந்தந்தப் பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளுக்கு நேரடியாகச் சென்று ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர். இதன் பலனாக, கடந்த இருபது நாட்களில் மட்டும் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் நாற்பத்தி நான்காயிரத்து 396 மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர். முதலமைச்சர் அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் தரமான கல்வி முறையினால், நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் தற்போது தனியார் பள்ளிகளைத் தவிர்த்து அரசுப் பள்ளிகளைத் தேடி வருவது பெரும் மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டும் நோக்கில், கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் இலவச சீருடைகள், புத்தகங்கள் மற்றும் சத்தான மதிய உணவுத் திட்டங்கள் குறித்துப் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் விரிவாக எடுத்துரைத்து வருகின்றனர். கல்வியில் புரட்சியை ஏற்படுத்தத் துடிக்கும் தமிழக அரசின் இந்தத் தீவிர முயற்சியால், அரசுப் பள்ளிகளின் பொற்காலம் மீண்டும் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
