'இலவச பிரிட்ஜ், மாதம் ரூ2000 ... மயிலாப்பூரில் சாமி கும்பிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது அதிரடித் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்ற இபிஎஸ், அங்குச் சிறப்புச் சாமி தரிசனம் செய்து ஆசி பெற்றார். கபாலீஸ்வரரை வணங்கிவிட்டு, ஒரு புதிய உத்வேகத்துடன் அவர் தேர்தல் களத்தில் குதித்துள்ளார்.

இந்தத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மயிலாப்பூர் தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது கட்சி போட்டியிடும் தொகுதியில் இருந்து பிரசாரத்தைத் தொடங்காமல், கூட்டணிக் கட்சியான பாஜக போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் இருந்தே தனது முதல் பிரசாரப் பேச்சைத் தொடங்கியிருப்பது அரசியல் நோக்கர்களைக் கவனிக்க வைத்துள்ளது. இதன் மூலம் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் ஒரு முதிர்ந்த தலைவராகத் தன்னை இபிஎஸ் முன்னிறுத்திக்கொண்டார்.

நேற்றுதான் 'இலவச பிரிட்ஜ், மாதம் 2000 ரூபாய் ஊக்கத்தொகை' என 297 வாக்குறுதிகள் கொண்ட மெகா தேர்தல் அறிக்கையை வெளியிட்டுத் தமிழகத்தையே அதிர வைத்தார் எடப்பாடி. இன்று பிரசாரத்தைத் தொடங்கியுள்ள அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படுவதாகவும் சரமாரியாகக் குற்றம் சாட்டி வருகிறார். மயிலாப்பூரில் தொடங்கியுள்ள இந்தச் 'சூறாவளி' பிரசாரம், அடுத்தடுத்த நாட்களில் தமிழகம் முழுவதும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
